Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தர்மா மடானி: ஆலயங்களுக்கு இரண்டாம் கட்டமாக 60 லட்சம் ரிங்கிட் நிதியுதவி

28/04/2026 08:18 PM

கோலாலம்பூர், 28 ஏப்ரல் (பெர்னாமா) -- தர்மா மடானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 462 ஆலயங்களுக்கு 92 லட்சத்து 40-ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு இரு கட்டங்களாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 

162 ஆலயங்களை உட்படுத்திய, 32 லட்சத்து 40-ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி  கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட வேளையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத்தில் 300 ஆலயங்களை உட்படுத்தி 60 லட்சம் ரிங்கிட் நிதியுதவி விநியோகிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் Datuk Seri ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1,000 இந்து ஆலயங்களின் நலனை இலக்காகக் கொண்ட இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டின் ஒரு பகுதி இதுவாகும். 

இதில், ஒவ்வொரு ஆலயத்திற்கும் தலா 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார். 

சமூக மேம்பாட்டு மையங்களாக வழிபாட்டுத் தலங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மூலம் மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். 

''இன்னும் 381 விண்ணப்பங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால், சில நிபந்தனைகளையும் ஆவணங்களையும் அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து அவர்களுக்கு மித்ரா உதவி செய்வார்கள். அனைத்தும் முழுமையாக இருந்தால் மூன்றாம் கட்டத்தில் அவர்களுக்கு நிதி விநியோகிக்கப்படும்,'' என்றார் அவர். 

கோலாலம்பூரில் இன்று இந்நிதியுதவி பெறும் 300 ஆலயங்களுக்கும் ஒப்புதல் கடிதங்களை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]