கோலாலம்பூர், 28 ஏப்ரல் (பெர்னாமா) -- ஒரு மனிதனின் உடல் எடையில் சுமார் ஏழு முதல் எட்டு விழுக்காடு இரத்தத்தில் அமைந்துள்ளது.
உயிரின் அடிப்படையாக விளங்கும் இரத்தம், அவசர நேரங்களில் எண்ணற்ற உயிர்களை காக்கும்.
விபத்துகள், அறுவை சிகிச்சைகள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், புற்றுநோய்கள் உட்பட, நாள்பட்ட நோய்களுக்கு இரத்தத்தின் தேவை தினசரி அதிகரித்து வரும் நிலையில், தேசிய இரத்த வங்கி இத்தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், இரத்த தானத்தின் அவசியம் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் செயல்முறைகள் குறித்து மருத்துவ ரீதியிலான தெளிவு பெறும் நோக்கத்துடன், பெர்னாமா செய்திகள் தேசிய இரத்த வங்கியை அணுகியது.
இரத்தத் தானம் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
முதல் வகை, வழக்கமாக மேற்கொள்ளப்படும் சிவப்பு இரத்தத் தானம் என்றும், இரண்டாம் வகை எஃபெரெசிஸ் (Apheresis) என்றழைக்கப்படும் இரத்தக் கூறுகளைப் பிரித்தெடுக்கும் செயல்முறையின் மூலம் பிளேட்லெட் (Platelets) அல்லது இரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா (Plasma) அல்லது இரத்த நீர்மம் தானம் என்றும் தேசிய இரத்த வங்கியின் நன்கொடையாளர் கொள்முதல் பிரிவுத் தலைவர் டாக்டர் தேன்மொழி தர்மலிங்கம் விவரித்தார்.
''இரண்டாம் வகை இரத்தத் தானத்திலிருந்து நாம் பிளேட்லெட் மற்றும் பிளாஸ்மா மட்டுமே எடுப்போம். சிவப்பு இரத்தத்தை மீண்டும் நாம் தானம் செய்பவரிடமே செலுத்திவிடுவோம். இச்செயல்முறைக்கு 40 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை தேவைப்படும். ஊசியைத் தவிர்த்து நேரப் பற்றாக்குறையினாலும் அதிகமானோர் இரத்தத் தானம் செய்ய முன்வர மறுக்கிறார்கள். அதேவேளையில், இரத்தத் தானம் செய்தால் உடல் பருமன் ஏற்படும், அதே ஊசி பயன்படுத்தப்படும் போன்ற தவறான புரிதல்களாலும் அவர்கள் முனவருவதில்லை,'' என்றார் அவர்.
இந்நிலையில், மலேசியாவில் நாள் ஒன்றுக்கு தேவைப்படும் இரத்த பைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட டாக்டர் தேன்மொழி, அனைவருக்குமே சிவப்பு இரத்த அணுக்கள் தேவைப்படாது என்று குறிப்பிட்டார்.
மாறாக, அதில் உள்ள platelets மற்றும் plasma-விற்கான தேவைகள் அதிகம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
''நாள் ஒன்றுக்கு மலேசியாவில் மட்டும் 2,200-இல் இருந்து 2,600 பைகள் வரை தேவைப்படுகிறது. சிலருக்கு பிளேட்லெட் மட்டும் தேவைப்படும்; சிலருக்கு பிளாஸ்மா, இன்னும் சிலருக்கு சிவப்பு இரத்த அணுக்கள் தேவைப்படும். இந்நிலையில், முன்பெல்லாம் ஒரு பை இரத்தத்தை நாம் ஒருவருக்கு மட்டுமே செலுத்துவோம். ஆனால், இப்போது அப்படியில்லை. நோயாளிக்கு என்ன தேவையோ அதனை செலுத்துகிறோம். அதனையே, ஒரு பை இரத்தத்தை மூவருக்குச் செலுத்தலாம் என்று கூறுகிறோம். ஆனால், இவை அனைத்திற்கும் முதலில் இரத்தத் தானம் செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.
சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் காலம் 35-இல் இருந்து 42 நாள்களாக இருந்தாலும், platelets-இன் ஆயுள் காலம் ஐந்திலிருந்து ஏழு நாள்கள் வரை மட்டுமே உள்ளதால் அதன் தேவையும் அதிகம் என்று டாக்டர் தேன்மொழி மேலும் விளக்கினார்.
இதனிடையே, இன்றைய சூழலில் அதிகமானோர் தங்களின் உடல் நலத்திற்காக கூடுதல் ஊட்டச்சத்து மருந்துகளை உட்கொள்ளும் நிலையில், இரத்தத் தானம் செய்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களை அவர் இவ்வாறு தெளிவுபடுத்தினார்.
''வைட்டமின் C ஊட்டச்சத்தாக இருந்தாலும் நோயாளிக்கு ஒருவித அழற்சியைக் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில், நோயாளிகள் பொதுவாகவே நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள். இந்நிலையில், கூடுதலான ஊட்டச்சத்து கொடுத்தாலும் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இரத்தத் தானம் செய்யும் ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே எந்தவோர் ஊட்டச்சத்து மருந்துகளை தானம் செய்பவர்கள் உட்கொள்ளக்கூடாது,'' என்றார் அவர்.
எனினும், ஊட்டச்சத்து மருந்துகளைத் தவிர்த்து, நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் அதிகக் கொழுப்பு மருந்தை உட்கொள்பவர்கள், சில வரையறைகளைக் கவனத்தில் கொண்டு தாராளமாக இரத்தத் தானத்தைச் செய்யலாம் என்று டாக்டர் தேன்மொழி கூறினார்.
''இம்மூன்று நோய்களுக்கும் ஒவ்வொரு வகை மருந்து உட்கொள்ளலாம். அம்மருந்துகளை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உட்கொண்டாலும் சிக்கல் இல்லை. ஆனால், அந்த மூன்று வகை மட்டும்தான். ஒரு நோய்க்கு ஒருவகை மருந்து. நீங்கள் இரத்தத் தானம் செய்யலாம். ஆனால், மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்ல வேண்டும்,'' என்றார் அவர்.
இரத்தத் தானம் செய்யும் பெண்களுக்கு hemoglobin எனப்படும் சிவப்பு நிற இரத்த அணுவின் அளவு 12.5-க்கு மேற்பட்டும், ஆண்களுக்கு 13.5-க்கு மேற்பட்டும் இருத்தல் அவசியம் என்று கூறிய அவர், அதனை அதிகரிக்க நவதானியம், பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]