Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உயர்திறன் பயிற்சி வாய்ப்புகளை வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்க வேண்டும்

28/04/2026 06:05 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- நாட்டில் முதலீடு செய்வதற்கான ஒரு முன் நிபந்தனையாக, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்நாட்டு திறமையாளர்களுக்கு உயர் திறன் சார்ந்த பயிற்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறை மட்டுமின்றி நாட்டின் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் இரசாயனத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டில் வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்ப முதலீடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்களின் வளர்ச்சியைத் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் துறைகளில் வரவிருக்கும் புதிய முதலீடுகளை ஆதரிப்பதற்கு, நாட்டில் போதுமான திறமையாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய இந்நடவடிக்கை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மலேசியா வெறும் தொழில்நுட்பப் பயனராக மட்டும் இல்லாமல், இத்துறையில் முன்னோடியாகவும் திகழ்வதை உறுதி செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களும், செயற்கை நுண்ணறிவு கல்விப் பாடத்திட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கப்படுவதாகவும் அன்வார் விவரித்தார்.

"தற்போது வளர்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய தொழில்நுட்பத் துறையில் இலக்கவியல் உருமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தரவு மையங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் ஆளுமையால் நெகிரி செம்பிலான், ஜோகூர், பினாங்கு, சரவாக் ஆகிய மாநிலங்களில் நிறைவான வளர்ச்சியைக் காண முடிகிறது. எனவே, கற்பித்தல் முறையில் நமது முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது," என்றார் அவர்.

இதனிடையே, Sovereign AI Cloud திட்டத்தை செயல்படுத்துவது உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்று கூறிய பிரதமர், மாறாக, தேசிய பாதுகாப்பின் கீழ் உள்ள முக்கிய தரவுகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே இது நோக்கமாகக் கொண்டது என்றும் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)