மேற்கு ஜாவா, ஏப்ரல் 28 (பெர்னாமா) -- மேற்கு ஜாவா, பெக்காசி திமோர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதோடு 85 பேர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் இரண்டாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இவ்விபத்தில் காயமடைந்த 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறிய அளவில் காயமடைந்தோர் வீடு திரும்புவதற்கும் அனுமதிக்கப்பட்டதாக ஜகார்த்தாவின் தேடல் மற்றும் மீட்பு அலுவலத் தலைவர் Desiana Kartika Bahari தெரிவித்தார்.
இரயில் பெட்டிகளில் இன்னும் சிக்கியிருப்பதாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டெடுத்து வெளியேற்றுவதில் மீட்புப் பணிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
திங்கட்கிழமை இரவு, Cikarang நோக்கிச் சென்று கொண்டிருந்த இரயிலை, அதே தண்டவாளத்தில் வந்த பயணிகள் இரயில் பின்னாளில் இருந்து மோதியதன் விளைவாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் இரயிலின் பயணிகள் என்பதை அந்நாட்டின் அரசாங்க இரயில்வே நிறுவனமான Kereta Api Indonesia-வின் தொடர்புத் துணைத் தலைவர் Anne Purba,
உறுதிப்படுத்தினார்.
அதேவேளையில், Argo Bromo Anggrek ரயிலில் இருந்த 240 பயணிகளும் இதில் உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)