சண்டக்கான், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- சண்டக்கான், கம்போங் கராமுந்திங், ஜாலான் பொகாராவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 வீடுகள் திக்கிரையாகின.
பின்னிரவு மணி 3.16-க்கு அக்கிராமத்தில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து, தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து 21 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக சண்டக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகூங் தெரிவித்தார்.
இயந்திரத் தொட்டி மற்றும் அருகிலுள்ள தீயணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட மூன்று வகையான நீர் மூலங்களைப் பயன்படுத்தி, தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
சுமார் 1.4 ஹெக்டரைப் பாதித்ததாக மதிப்பிடப்பட்டிருக்கும் இத்தீ, அதிகாலை மணி 4.29-க்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன்வழி, அக்கிராமத்தில் இருந்த மேலும் 100 வீடுகள் காப்பாற்றப்பட்டன.
சம்பவ இடத்தில் வேறு எவ்வித ஆபத்தும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டப் பின்னர், காலை மணி 7.01-க்கு அந்நடவடிக்கை முழுமையாக நிறைவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில், உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sandakan-னில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)