| BREAKING NEWS | LUBNAN RUGI SEHINGGA US$160 JUTA SEHARI AKIBAT KONFLIK - PERSATUAN EKONOMI | |
கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்ட மரண விபத்து குறித்த விசாரணை அறிக்கை, தொடர் நடவடிக்கைக்காக, நாளை மாநில வழக்கு விசாரணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படும்.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 302-டின் கீழ், கொலைக் குற்றத்திற்கான விசாரணைக்கு உதவும் பொருட்டு, 31 வயதான அந்நபரின் தடுப்புக் காவல் நீட்டிப்பும் நாளை வரை வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், ஏசிபி முஹமட் சம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, 12 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி காலை மணி 5.38 அளவில், பெரோடுவா அல்சா ரக இ-ஹெய்லிங் வாகனம் மற்றும் ஃபோர்ட் ஃபியேஸ்தா ரக கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது.
இராணுவ அதிகாரி ஓட்டிச் சென்ற Ford Fiesta ரக கார், 41 வயதான நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா அல்சாவுடன் மோதுவதற்கு முன்னர், எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்ததாக நம்பப்படுவதாக, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த பெரோடுவா அல்சா கார், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-இல் இருந்து இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்தது.
அவ்விபத்தின்போது, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக 22 வயது வங்காளதேச ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், அவருடன் பயணித்த 20 வயது வங்காளதேச பெண் காயமடைந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)