கோலாலம்பூர், ஏப்ரல் 29 (பெர்னாமா) -- கோடிக்கணக்கான ரிங்கிட் முதலீட்டுக் கடன் தொடர்பான அவதூறு வழக்கில் டான் ஶ்ரீ அப்துல் காடிர் ஷேக் ஃபட்சிர்-க்கு 250,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு தொழிலதிபர் டத்தோ ஶ்ரீ அலிஃப் சுக்ரி கமாருசமானுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முன்னாள் பண்பாடு, கலை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வாதியாகவும் அலிஃப் சுக்ரிபிரதிவாதியாகவும் தாக்கல் செய்த சம்மன் வழக்கிற்கு அனுமதியளித்த பின்னர், நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் அம்முடிவை அறிவித்தார்.
அதனைத் தவிர்த்து, அப்துல் காடிர்க்கு 50,000 ரிங்கிட்டை செலவுத் தொகையாக செலுத்தும்படியும்,அலிஃப் சுக்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதிவாதி அல்லது அவரது அலுவலர்கள் அல்லது முகவர்கள் புகார் செய்யப்பட்ட விவகாரத்தை வெளியிடவோ வெளியிட காரணமாக இருப்பதோ அல்லது அதுபோன்ற விளைவைக் கொண்ட வேறு எச்செயலையும் செய்வதர்கு தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி ரோஸ்லான் உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாள்களுக்குள் பிரதிவாதி தனது முகவர்கள் மூலம் வாதிக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறான எழுத்துப்பூர்வப் பதிவை அனைத்து சமூக ஊடகக் கணக்குகளிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)