கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) -- 17 ஆண்டுகளுக்கு முன்னர் தியோ பெங் ஹோக்கின் மரணத்தை கொலைக் குற்றமாக விசாரணை நடத்தக் கோரி, அவரது குடும்பத்தினர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய சட்ட நடவடிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களான அவரின் அண்ணன் தியோ மெங் கீ, பெற்றோர் தியோ லியோங் ஹ்வீ மற்றும் தெங் ஷுவ் ஹொய் ஆகியோர் லிம் வெய் ஜியெட் சட்ட நிறுவனத்தின் மூலம் ஏப்ரல் 17-ஆம் தேதி சீராய்வு மனுவிற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
தேசிய போலீஸ் படைத் தலைவர், குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சட்டத்துறை தலைவர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோரை முதல் ஐந்து பிரதிவாதிகளாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை, மே 18-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் கொலைக் குற்றத்தின் கீழ் அல்லது அதே சட்டம், செக்ஷன் 304-இன் கீழ் உள்நோக்கமின்றி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்தின் கீழ், பெங் ஹோக்கின் மரணம் குறித்து விசாரணை தொடங்குவதற்கு அனைத்து பிரதிவாதிகளுக்கும் சட்டப்பூர்வ கடமை உள்ளது என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]