கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் அரசாங்கம் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலானில் கடைபிடிக்கப்படும் மரபு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''நெகிரி செம்பிலான் அரசாங்கம் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும், மரபு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்,'' என்றார் அவர்.
தேசிய முன்னணியைச் சேர்ந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் ஒரு சந்திப்பை நடத்தவிருப்பதாக, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்ததாக ஃபஹ்மி கூறினார்.
புதன்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற வாரந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)