ரோம், 14 மே (பெர்னாமா) -- இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு உக்ரேனின் எலினா ஸ்விடோலினா தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், அவர் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளரான எலனா ரைபாகினாவுடன் விளையாடினார்.
முதல் ஆட்டத்தில், ஸ்விடோலினா 2-6 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டாலும், அடுத்த இரண்டு செட்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
இதன் வழி, இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு ஸ்விடோலினா முதல் முறையாகத் தேர்வாகியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில், அவர் மூன்று முறை வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள இகா ஹுவான்டெக்குடன் விளையாடவிருக்கிறார்.
இதனிடையே ஆடவருக்கான காலிறுதி ஆட்டத்தில், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷ்யாவின் கெரேன் கச்சனோவ்வுடன் மோதினார்.
பலம் பொருந்திய இரு ஆட்டக்காரர்கள் சந்தித்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது,.
முதல் செட்டில், 6-1 என்ற புள்ளிகளில் காஸ்பர் ரூட் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் செட்டை 6-1 என்ற நிலையில் கெரேன் கச்சனோவ் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில், காஸ்பர் ரூட் 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கான தமது இடத்தை உறுதி செய்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)