கோலாலம்பூர், 14 மே (பெர்னாமா) -- மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனத்தைச் செலுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.
ஜாலான் அம்பாங்கில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியரான ஏ. துரைசிங்கம் மற்றும் ஏ. மேனகா குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த பின்னர் அவர் இதனை கூறினார்.
''மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனத்தைச் செலுத்தும் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் ஒரு குடும்பமே இன்று பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்பதால், இவ்விபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது,'' என்று யுனேஸ்வரன் விவரித்தார்.
இனிவரும் காலங்களில், இரவுநேரங்கள், வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, மதுபான விற்பனை நேரத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிகரெட் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் போல, மதுபான பொருட்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது ஆகியவைக் குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், உரிமமின்றி மதுபானம் விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவை அருகே மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனத்தைச் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்குக் கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்படுவதோடு, உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்களுக்குக் காரணமானவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் ஆயுள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் அரசாங்கத்திடம் முன்வைத்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய யுனேஸ்வரன், அக்குடும்பத்தின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)