Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

போலீஸ் சோதனையில் தப்பிக்க முயற்சித்த இருவர் கைது

02/05/2026 05:54 PM

பெட்டாலிங் ஜெயா, மே 02 (பெர்னாமா) -- நேற்றிரவு, பெட்டாலிங் ஜெயாவில், போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த, ஓர் உள்ளூர் ஆடவரும் வெளிநாட்டுப் பெண்ணும் பயணித்த கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களின் காரைச் சோதனையிட்டதில், அதில் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் சுமார் 16 கிராம் எடையுள்ள 17 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷம்சுடின் மாமாட் கூறினார்.

ஷா ஆலம் நோக்கிச் செல்லும் NKVE நெடுஞ்சாலையில், சுபாங் டோல் சாவடி வெளியேறும் தடத்திற்கு அருகில், போலீசாரின் சோதனை நடவடிக்கையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த புரோட்டான் பிரிவே ரக காரை, போலீசாரின் ரோந்து வாகனம் துரத்திய சம்பவம் குறித்து, நேற்றிரவு மணி 9.08 அளவில் தங்கள் தரப்பிற்குப் புகார் கிடைத்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஷம்சுடின் குறிப்பிட்டிருந்தார்.

45 வயதான அச்சந்தேக நபர், சுபாங் ஜெயா சந்திப்பிற்குள் நுழைவும் வரை ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்றதுடன், பெர்சியாரான் துஜுவான் பகுதியில் உள்ள சாலை சமிக்ஞை விளக்கு சந்திப்பில் ஒரு கருப்பு நிற BMW காரை மோதியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆடவர் மீது குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான 21 வழக்குகள் உள்ள நிலையில், பெண் மீது எவ்வித்த குற்றப் பதிவுகளும் இல்லை என்று ஷம்சுடின் தெரிவித்தார்.

மேலும், சிறுநீர் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட ஆடவர் மெத்தாஃபெத்தாமின் வகை போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை மூன்று நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஊழியரை தமது கடமையில் இருந்து தவற வைத்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 186, போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 12(2) மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 42(1) மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 39A(1) ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)