கிள்ளான், மே 02 (பெர்னாமா) -- நேற்று காலை, சிலாங்கூர் கிள்ளானில் உள்ள தாமான் எங் ஆன் சாலை அருகே சென்றுக் வாகனத்திலிருந்து வெளியே குதித்த ஈ-ஹெய்லிங் பயணி ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவத்தில், 25 வயதான உள்நாட்டுப் பெண் ஒருவர் வலதுபுறக் கதவைத் திறப்பதற்கு முன்னர், வாகன ஓட்டுநர் எந்தவிதக் காரணமும் இன்றி பின்னோக்குக் கண்ணாடி வழியாகத் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தது, அவருக்கு அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியதாக வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி எஸ். விஜயா ராவ் தெரிவித்தார்.
நகர்ந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து அப்பெண் வெளியே குதித்த மறுகணமே, ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அப்பெண்ணின் நிலையைப் பார்த்த போது, அவர்கள் இலேசான காயங்களுடன் காணப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விஜயா ராவ் கூறினார்.
இதனிடையே, சம்பந்தப்பட் காரை, முழுநேர இ-ஹெய்லிங் ஓட்டுநரான 47 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் செலுத்தி வந்ததாகவும், அவர் அப்போது இரண்டு உள்நாட்டுப் பெண் பயணிகளை ஏற்றிச் வந்ததாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த e-hailing ஓட்டுநர் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆர்டரை ரத்து செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் உதவி கோரினார்.
இச்சம்பவத்தை அடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட ஈ-ஹெய்லிங் ஓட்டுநர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறிய விஜயா ராவ், குற்றவியல் சட்டம் செக்ஷன் 336-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கிள்ளான் பகுதியில் சுற்றி வந்த ஒரு காரிலிருந்து வெள்ளைச் சட்டை அணிந்த பெண் ஒருவர் வெளியே குதிப்பதைக் காட்டும் ஒரு நிமிட காணொளிப் பதிவு, முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)