கோத்தா பாரு, மே 08 (பெர்னாமா) -- உடலில் 61 கத்திக் குத்துக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட, கல்லூரி மாணவி தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் இரு இளைஞர்களின் தடுப்புக் காவல், மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் இன்று வெளியிட்டார்.
19 வயதிற்கு கீழ்ப்பட்ட அவ்விருவரும் இன்று காலை மணி 8.50-க்கு கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, கடந்த மே இரண்டாம் தேதி அவர்களுக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 66 மற்றும் 60 வயதான தம்பதியினர், கடந்த திங்கட்கிழமை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கெதேரே, கம்போங் சீமா நெல் வயலுக்கு அருகிலுள்ள சாலையில், 61 கத்திக் குத்துக் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அப்பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் இங்கு வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)