ஜாலான் துன் இஸ்மாயில், 09 மே (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அம்னோவும் தேசிய முன்னணியும் இணக்கமாக உள்ளன.
அனைத்துக் கட்சிகளும் ஒரே இலக்குகளைப் பகிர்ந்து கொள்வதாலும், குறிப்பாக மக்களின் நலன்களுக்காகப் போராடுவதினாலும், இது சாத்தியமடைவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார்.
15-வது பொதுத் தேர்தலின் போது கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள வாழ்க்கைச் செலவினம், கல்வி மற்றும் வேலையின்மை ஆகிய வாக்குறுதிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
"மேலும், மக்கள் எல்லா நேரமும் நிலைப்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளாலும் தொந்தரவுக்கு உள்ளாகக் கூடாது. மக்களின் நலனுக்காக நாம் எந்தவிதமான சங்கடங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும். காரணம் தேர்தலுக்கு முன்பு, தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் செயல்திட்டங்களே மிகவும் முக்கியமானவை," என்றார் அவர்.
தற்போது ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் 47 விழுக்காடு ஒற்றுமைகள் காணப்படுவதால், தற்போதுள்ள ஒத்துழைப்புக்கு இது ஒரு உறுதியான அடித்தளத்தை அமைப்பதாக தேசிய முன்னணியின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
ஜ.செ.க உட்பட, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் கூட்டரசு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள நான்கு முக்கிய அம்சங்களை மதிப்பதாகவும் துணைப் பிரதமர் கூறினார்.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில், எந்தக் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க எளிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]