கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) -- திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோலாலம்பூர் முழுவதும் உள்ள நீர்த்தேக்கக் குளத்தின் கொள்ளளவை ஆய்வு செய்ய ஒரு சிறப்புப் பணிக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அடைப்பட்ட வடிகால் அமைப்புகள் மற்றும் தற்போதுள்ள நீர்த்தேக்கக் குளங்களில் கொள்ளளவு வரம்புகள் போன்ற திடீர் வெள்ளத்திற்கான பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டதால் அந்நடவடிக்கை அவசியமானது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.
தினசரி பெறப்படும் புகார்கள் மூலம் தீவிர கண்காணிப்புகளை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் மேற்கொண்டு வருவதாகவும் அந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளின் அரசியல்வாதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஹன்னா யோ தெரிவித்தார்.
''அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேயர் இது குறித்த தகவல்களைத் தெரிவித்து வருகிறார். தற்போது நாங்கள் செய்ய விரும்புவது என்னவென்றால், கோலாலம்பூர் முழுவதும் உள்ள நீர்த்தேக்கக் குளங்களில் கொள்ளளவை ஆய்வு செய்ய ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளோம். ஆனால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற வெப்பக் காப்பு கொண்ட மீன் பெட்டி அறிமுக விழாவில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கோலாலம்பூரைச் சுற்றி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தச் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]