Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு நியாயமாக மதிப்பிடப்படும்

09/05/2026 04:55 PM

ஜாலான் துன் இஸ்மாயில், 09 மே (பெர்னாமா) -- கட்சியிலிருந்து முன்னதாக நீக்கப்பட்டு மீண்டும் அதில் இணையும் தலைவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் வெற்றி வாய்ப்பு ஆகிய கூறுகளை அடிப்படையாக கொண்டு, 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அவர்களின் வாய்ப்பை அம்னோ  நியாயமாக மதிப்பீடு செய்யும்.

மீண்டு கட்சியில் இணைந்திருக்கும் தலைவர்களின் தாக்கம் குறித்து இதுவரை விரிவான மதிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''எனவே, அம்னோவிற்கு நேரடியாகப் பங்களிப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் நாம் அவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்,'' என்றார் அவர். 

அம்னோவின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அஹ்மட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

16-வது பொதுத் தேர்தலில்போட்டியிடுவதற்கான வாய்ப்பு,  ஒரு குறிப்பிட்டர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளரின் திறனைப் பொறுத்தது என்றும் அவர் விளக்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் நிலவரப்படி, இளைஞர் அணி முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின், முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் உட்பட சுமார் 6,000-க்கும் மேற்பட்ட முன்னாள் கட்சி உறுப்பினர்கள் அம்னோவில் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதனிடையே, தேசிய முன்னணியில் ம.இ.கா.வின் நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அக்கட்சி கூட்டணியுடனேயே நீடிப்பதாகவும், அது தொடர்பானப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அஹ்மட் சாஹிட் தெளிவுபடுத்தினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]