கோலாலம்பூர், 10 மே (பெர்னாமா) -- அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் உதவித்தொகையை மறுஆய்வு செய்வதற்கான பரிந்துரை விரைவில் இறுதி செய்யப்படும்.
இத்திட்டம் தொடர்பான பரிந்துரை ஆவணம் கடந்த சில வாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இப்பரிந்துரையை MTEN ஆய்வு செய்துள்ளது. T20 அல்லது T15 ஆக இருந்தாலும், உண்மையில் இப்பரிந்துரை ஒரு மாதத்திற்கு முன்பே டான் ஸ்ரீ ஹசனின் குழுவால் மூன்று வாரங்களாக ஆய்வு செய்யப்பட்டது. உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக, அது T20-ஆ அல்லது T15-ஆ என்பதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதன் பிறகு அதைச் செயல்படுத்துவது எளிதாக இருக்கும்,'' என்று அவர் கூறினார்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாணவர்களுடனான பிரதமரின் சந்திப்பு நிகழ்ச்சியில் டத்தோ ஶ்ரீ அன்வார் பேசினார்.
இம்மாத மத்தியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் எண்ணெய் விநியோகத் தொடர்ச்சித் திட்டத்தில், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது உள்ளிட்ட உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரங்களும் கருத்தில் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)