Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அன்பால் உயிர்களைக் காக்கும் தாதியர்கள்

12/05/2026 07:42 PM

கோலாலம்பூர், 12 மே (பெர்னாமா) --  அன்பு, பொறுப்பு, தியாகம் என காலநேரங்களைக் கருதாமல் பாராபட்சம் பாராமல் உழைப்பதால் மகத்துவம் மிக்கது தாதியர் பணி.

இறைத்தன்மையோடும் கருணையோடும் மனிதநேய வடிவில் வலம் வரும் தாதியர்கள், பல சவால்களைக் கடந்து மருத்துவமனைகளில் நோயாளிகளைக் காப்பாற்றுவதிலும் அரவணைப்பதிலும் துணை நிற்கின்றனர்.

அவர்களின் சேவைக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில் உலக தாதியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.

கைவிளக்கு ஏந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் இங்கிலாந்தில் பிறந்த தினத்தை இவ்வுலகம் ஆண்டு தோறும் தாதியர் தினமாய்க் கொண்டாடி வருகிறது.

சமூக சீர்திருத்தவாதியாகவும் நவீன தாதியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்ததால் இவரது தொண்டு இன்றும் போற்றப்படுகிறது.

அன்பான பணிவிடையும் ஆறுதல் வார்த்தைகளையும் கொண்டு மனிதர்களைத் தாக்கியிருக்கும் நோய்களை வெகுவாய் குறைக்கும் பணிகளில் புன்னகை மாறாது பணி செய்யும் தாதியர்கள், எப்போதும் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து தற்போது உலகம் எதிர்நோக்கி வரும் பெருந்தொற்று காலம்கட்டம் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களின் சேவைகள் மிளிர்ந்துக் காணப்படுகின்றன.

அவ்வகையில், பல ஆண்டுகளாக தாதியர் துறையில் தங்களை அர்ப்பணித்து வரும் சில தாதியர்கள் அந்த அனுபவங்களைப் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி நம்பிக்கை இழந்த மனங்களுக்கு தைரியத்தை அளிப்பதிலும் தாதியர்களின் பங்கு அளப்பரியதாகிறது.

அவர்களின் கருணை நிறைந்த அணுகுமுறை பலரின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்றுவதாகவும் இன்னும் சிலர் கூறினர்.

அர்ப்பணிப்பின் அச்சாணியாகவும், பொறுமையின் சிகரமாகவும் திகழும் தாதியர்களைப் போற்றி அவர்களின் சேவைக்கு தலைவணங்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதி உலக தாதியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.

இதனிடையே, தாதியர் பணி என்பது தியாகம், மன வலிமை அசாத்திய துணிச்சல் நிறைந்த ஓர் உன்னதமான பணியாகும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முகநூல் வாயிலாக வர்ணித்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தாதியர்களின் சேவைகளைப் பெரும்பாலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றாலும், அவர்களின் தியாகங்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் மதிப்பு வாய்ந்தவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் வலியால் துடிக்கும்போது, ஆறுதலாக இருந்து, பயத்தில் இருக்கும் குழந்தைகளை தேற்றுபவராகவும், கவலையான நேரங்களில் குடும்பங்களுக்கு வலிமை அளிப்பவராகவும் செயல்படும் தாதியர்களின் அரவணைப்பை ஏறக்குறைய ஒவ்வோரு தனிநபரும் உணர்ந்திருக்கிறார்கள் என அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)