இந்தியா, 11 மே (பெர்னாமா) -- மேற்கு ஆசிய மோதல்கள் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கத்தினால், எரிபொருள் பயன்பாடு, தங்கம் வாங்குவது மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு, நாட்டு மக்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
தேசிய நலனுக்காக அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, எரிபொருளைச் சேமிப்பதற்காகப் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகளால், இந்தியா பெட்ரோலிய இறக்குமதி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும், ரயில்களை அதிகம் பயன்படுத்துவது, மின்சார வாகனங்கள் மற்றும் கார் பகிர்வு போன்ற நடவடிக்கைகளை மோடி பரிந்துரைத்தார்.
அமெரிக்கா–ஈரான் மோதல் இந்திய பொருளாதாரத்தை பாதித்ததாகக் கூறிய அவர், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்கம் வாங்குதலைக் குறைப்பது அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.
சுற்றுலாத் தல திருமணங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.
தற்போதைய சூழலில் தங்க நன்கொடை தேவையில்லை என்றாலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக தங்க நகைகள் வாங்குவதை மக்கள் தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)