திருவனந்தபுரம், 14 மே (பெர்னாமா) -- கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசனை காங்கிரஸ் இன்று தேர்வு செய்துள்ளது.
கேரள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவிக்குக் கட்சியில் கடும் போட்டி நிலவியது.
அதில் குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோரிடம் இது குறித்து கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதன் அடிப்படையில், அறிக்கையும் தாக்கல் செய்ய, காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கட்சி தலைமைத்துவத்திடம் இக்குழு அறிக்கையை ஒப்படைத்த நிலையில், பரிந்துரைக்கப்பட்ட அம்மூவரிடமும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
புதிய முதலமைச்சரைத் தேர்தெடுப்பதில் பத்து நாள்களாக இழுபறி இருந்த வந்த நிலையில், தற்போது வி.டி. சதீசன், தலைமையகத்தால் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்கான தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)