கோலாலம்பூர், 15 மே (பெர்னாமா) -- கோலாலம்பூர் துங்கு அசிசா மருத்துவமனையின் நோயாளி அறை ஒன்றில் தவறுதலாக மாறிய இரு குழந்தைகள் தொடர்பிலான விவகாரம் தீர்க்கப்பட்டு அவர்கள் மீண்டும் தத்தம் தாய்மாரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்விவகாரம் கண்டறியப்பட்டவுடனேயே உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷம்சுல் அனுவார் கமாருடின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தெளிவான விளக்கத்தையும் ஆதரவையும் மருத்துவமனைத் தரப்பு வழங்கியதாக அவர் கூறினார்.
குழந்தைகளின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய தாய்ப்பால் ஊட்டும் செயல்முறையோ அல்லது எவ்வித சிகிச்சையளிப்போ இச்சம்பவத்தின் போது ஏற்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்விவகாரத்தை மருத்துவமனை தீவிரமாகக் கருதுவதாகக் கூறிய டாக்டர் ஷம்சுல், இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய நடப்பிலுள்ள பணி செயல்முறைகளை மேம்படுத்தவும், உள் விசாரணை ஒன்று நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)