நியூயார்க் , 19 மே (பெர்னாமா) -- ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக அதன் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், ஈரான் மீது பெரிய தாக்குதலை எந்நேரத்திலும் தொடுக்கத் தயாராக இருக்குமாறு, பென்டகனுக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக தீவிரப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு மிகவும் ஏற்புடைய ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் வழங்கிய வாக்குறுதிகள் போதுமானதாக இல்லை என்று நேற்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்நாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடுத்தன.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரானும் கடுமையான தாக்குதல் நடத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)