கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- 30,000-இல் இருந்து 60,000 மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு பின்வாசல் வழியாக நுழைந்ததாகக் கூறப்படுவது நாட்டின் உயர்க்கல்வி அமைப்பின் நேர்மை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடிய மிகக் கடுமையான குற்றச்சாட்டாகும்.
ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுகள் பொதுப் பல்கலைக்கழகங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதோடு, தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் நிதி ஆதாயத்திற்காக பறிக்கப்பட்டதைப் போன்ற தவறான ஓர் கண்ணோட்டத்தை உருவாக்குவதாக, உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
இத்தகையச் செயல்கள், மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு, குறிப்பாக உயர்க்கல்வி கழகங்களுக்கான சேர்க்கை செயல்முறையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி கூறினார்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சட்டவிரோதமாக பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில்கிறார்கள் என்பது உண்மை என்றால், குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் தங்கள் கூற்றுகளுக்கு ஆதரவாக ஆதாரங்களையும் உண்மைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி முன்வைக்க முடியாது.
ஏனெனில், கல்வி உலகில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புள்ளிவிவரத்திற்கும், அதன் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்க்கக்கூடிய வழிமுறை மற்றும் அடிப்படை இருக்க வேண்டும் என்று டாக்டர் சம்ரி திட்டவட்டமாகக் கூறினார்.
அதன் அடிப்படையில், இது தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்படும் வகையில் சில பொதுப் பல்கலைக்கழகங்கள் போலீஸ் புகார்கள் அளித்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)