சிகாமட், ஜூன் 17 (பெர்னாமா) -- ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பல உதவிகள் கிடைத்திருக்கின்றன.
இனி வரும் காலங்களிலும் அப்பள்ளிகளில் கல்வியை வலுப்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
''சிகாமாட்டில் இருக்கக்கூடிய 43 பள்ளிகளில் ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்குதான் நிறைய உதவிகள் செய்திருக்கின்றோம். அதுதான் உண்மை,'' என்றார் அவர்.
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய யுனேஸ்வரன் ராமராஜ் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்ததாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரதமர் அலுவலகத்திலிருந்து கிடைத்துள்ள தற்போதைய பொருளாதார நிலவரங்கள் மற்றும் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதோடு, தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகளை ஆசிரியர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று யுனேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
''ஒரு குடும்ப வறுமையில் இருந்தால், மாதந்தோறும் நூறு ரிங்கிட்டும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கொடுத்தால் மட்டும் அவர்களின் நிலைமை மாறிவிடாது. ஒரு குடும்பத்தில் பட்டதாரி, தொழில்முனைவோர் உருவாகும்போதுதான் வறுமை ஒழியும். ஆக, பொருளாதார சூழ்நிலைகளை ஆசிரியர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.
எதிர்காலத்தில் சீனப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளின் கல்வியாளர்களுடனும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்த விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)