கன்சாஸ் சிட்டி, 17 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டிக்கான J குழு ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் அல்ஜீரியாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் அல்ஜீரியாவை 3-0 என்ற கோல்களில் அர்ஜென்டினா தோற்கடித்தது.
அர்ஜென்டினாவின் மூன்று கோல்களையும் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி அடித்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
அமெரிக்கா,கன்சாஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது.
17-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி அடித்த முதல் கோலுடன் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது.
இரண்டாம் பாதியில் அல்ஜீரியா சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆட்டத்தை அர்ஜென்டினாவே ஆக்கிரிமித்தது.
அதன் பலனாக 60 மற்றும் 76-வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அடித்து, 2026-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியை அர்ஜென்டினா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இதற்கு முந்தைய ஆட்டங்களில், அர்ஜென்டினாவுக்கு மெஸ்சி பல ஹெட்ரிக் சாதனை படைத்திருந்தாலும், உலக கிண்ண காற்பந்து போட்டியில் இதுவே அவர் புரிந்த முதல் ஹாட்ரிக் ஆகும்.
மேலும், உலக கிண்ண காற்பந்து போட்டி வரலாற்றில் தொடர்ந்து ஆறு முறை விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்று, மெஸ்ஸி தமது காற்பந்து பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)