கோலாலம்பூர், மே 22 (பெர்னாமா) -- பெற்றோர்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளும் பிறக்கும் குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
குறிப்பாக, நாற்பது வயதை கடந்த தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் DOWN SYNDROME அல்லது மனவளர்ச்சி குறைபாட்டுடன் பிறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதனைக் கருத்தில் கொண்டு, கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் தொடக்க கட்ட மருத்துவ ஆலோசனைகள் மிகவும் அவசியம் என்று குழந்தை நல ஆலோசகரும் நரம்பியல் நிபுணருமான, டாக்டர் பூரணி ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளை கருவிலேயே அல்லது பிறந்தவுடனேயே கண்டறிய முடியும்.
கர்ப்பிணிகள் அதற்கு ஏற்ப சரியான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் பூரணி ஆனந்தகிருஷ்ணன் விளக்கினார்.
"கருவிலேயே கண்டு பிடிக்கலாம். 12 வாரத்தில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைகள் உட்பட பல சோதனைகள் வழி தெரியும். சில பேருக்கு பரிசோதனைகளில் தெளிவாக தெரியாது. பிறக்கும் நேரத்தில் கண்டுப்பிடித்துவிடலாம்," என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, தங்களின் மன அழுத்த அளவும், உணவு பழக்க முறைகளும் எப்போது சீராக இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
அது ஆரோக்கியமான அல்லது எந்தவொரு பிரச்சனையும் இன்றி குழந்தை உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகநலத் துறை, JKM-இன் கணக்கெடுப்பின்படி, ஓர் ஆண்டில் 500 குழந்தைகள் மனவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கின்றன.
அதாவது, நாட்டில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக டாக்டர் பூரணி கூறினார்.
இதனிடையே, சமூக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் இக்காலக்கட்டத்தில் மனவளர்ச்சி குறைபாடு குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருப்பதாக அவர் விளக்கினார்.
"முந்தைய காலங்களில் பல பேருக்கு இந்த மனவளர்ச்சி குறைபாடு குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது சமூக வலைத்தளம், இணைய வசதிகள், நிறைய மருத்துவ வசதிகள் மூலம் பலர் இதனை தெரிந்து வைத்திருக்கின்றனர்," என்றார் அவர்.
சில மனவளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகள், உடல் ரீதியாகவும் மனதளவிலும் சமுதாயத்தில் பல சவால்களை எதிர்நோக்குவர்.
எனினும், பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்குவிப்பனால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று டாக்டர் பூரணி தெளிவுப்படுத்தினார்.
"சில குழந்தைகளுக்கு தாம் ஒதுக்கப்படுகிறோம் என்று தெரியும். இதனை எப்படி கையாள்வது என்று பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் அறிவுறுத்தலில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்," என்றார் அவர்.
அண்மையில், பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)