Ad Banner
Ad Banner
 பொது

ஓப்ஸ் திரிஸ் 4.0: உள்ளூர் ஆடவர் கைது

23/05/2026 05:39 PM

பெர்மைசூரி, 23 மே (பெர்னாமா) -- இன்று காலை திரெங்கானு, மெராங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் திரிஸ் 4.0 சோதனை நடவடிக்கையில், லாரி ஓட்டுநரான உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  

அவ்வாடவர், சுமார் 1,600 ரிங்கிட் மதிப்புடைய உதவித் தொகைக்கு உட்பட்ட 500 லிட்டர் பெட்ரோலை இரு கலனில்  வைத்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இன்று காலை மணி 7.30 அளவில், போலீஸ் உறுப்பினர்கள் ஐவர் உட்பட உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் உறுப்பினர்கள் எண்மர் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, 30 வயதிற்குட்பட்ட அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு கே.பி.டி.என் இயக்குநர்முஹமட் முஃப்சி லாட் தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட அந்த பெட்ரோல் நிலையத்தில் உதவித் தொகைக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கசிவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு வாரங்களாக உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முஹமட் முஃப்சி கூறினார்.   

''சிறப்பு அனுமதி பெர்மிட்டைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. எரிவாயு நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு அந்த பெர்மிட் செல்லுபடியாகாதது என நம்பப்படுகிறது. தொடர் சோதனையில், சந்தேக நபரிடமிருந்து எட்டு செல்லுபடியாகாத பெர்மிட்டுகள் கண்டெடுக்கப்பட்டன,'' என்றார் அவர். 

அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்குவதற்கு எட்டு போலி அனுமதி பெர்மிட்டுகள் பயன்படுத்தப்பட்டு, பின்னர் அவை தொழில்துறையினருக்கு விற்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 122-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]