Ad Banner
Ad Banner
 

அரசாங்க வாய்ப்புகள்; பேராக் இந்தியத் தொழில்முனைவோருக்குக் கருத்தரங்கு

23/05/2026 06:17 PM

ஈப்போ, 23 மே (பெர்னாமா) -- சிறு வணிகர்களுக்குக் குறுங்கடன் சேவை குறித்த தகவல்களை வழங்கும் நோக்கில், அரசாங்க நிதி நிறுவனங்கள் நேரடியாகக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ள நிலையில், 13-வது மலேசியத் திட்டம், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் பேராக் செஜாத்ரா 2030 ஆகிய திட்டங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றை பேராக் இந்தியர் வர்த்தக சபை இன்று ஏற்பாடு செய்தது.

இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்களின் வணிகத்தை மேம்படுத்திக் கொள்ள, அரசாங்கம் வழங்கி வரும் வாய்ப்புகள் குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது.  

மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார மாற்றங்களும், அரசின் புதிய கொள்கைகளும் தொழில்முனைவோருக்கு உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து, கருத்தரங்களில் கலந்துகொண்டவர்களுக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் விளக்கம் அளித்தார்.

''தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து பல விளக்கக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேராக் இந்தியர் வர்த்தக சபையை நான் கேட்டுக் கொண்டேன். மேலும் இது போன்ற முயற்சிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்,'' என்று துளசி கூறினார்.

புதிய மற்றும் தற்போதைய தொழில்முனைவோர் தங்களின் வியாபார வளர்ச்சிக்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், பொருளாதார மாற்றங்களுக்குத் தகுந்து செயல்படவும் இந்த கருத்தரங்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகப் பேராக் இந்திய வர்த்தக சபையின் தலைவர் எம்.கேசவன் முனுசாமி குறிப்பிட்டார்.

''இந்த முயற்சியை இத்துடன் நிறைவு செய்யக் கூடாது. சபையில் புதிய உறுப்பினர்கள் சேர வேண்டும். அப்போதுதான் அதிகமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்,'' என்று அவர் விவரித்தார்.

ஈப்போவில் உள்ள இந்திய வர்த்தக சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கைத் துளசி மனோகரன் தொடக்கி வைத்த நிலையில் இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)