புது டெல்லி, 23 மே (பெர்னாமா) -- இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடும் வெப்பத்தை தொடர்ந்து அந்நகரில் உள்ள ஓர் ஏரியின் நீர் கணிசமாக குறைந்து வருகிறது.
நீர் பற்றாக்குறையால் ஏரியின் நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
புது டெல்லியில் உள்ள சஞ்சய் எனும் ஏரியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் உயிரிழந்த மீன்களைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் நீடித்த வெப்பம் மற்றும் நீரில் ஆக்சிஜன் அளவு குறைவது போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புது டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 40-47 பாகை செல்சியஸ் வரை பதிவானதால், இந்திய வானிலை ஆய்வு மையம் வட மற்றும் மத்திய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல் நினோ வானிலை காரணமாக, மே மாதத்தில் சராசரியை விட அதிகமான வெப்ப அலை நிலவுவதாகவும் அம்மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையில், இந்தியாவில் 7,000-க்கும் அதிகமான வெப்பத்தாக்குதல் பாதிப்புகளும், 14 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]