ஈப்போ, மே 24 (பெர்னாமா) -- கே.எல் சென்ட்ரல் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஈப்போ நகர வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் இலக்கில் ஈப்போ சென்ட்ரல் என்ற மாபெரும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஈப்போ புந்தோங்கிற்கு மிக அருகில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்ட அமலாக்கத்தால், ரயில்வே நிலத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியும் நான்கு ஆலயங்களும் அகற்றப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கூறினார்.
மாறாக, இருக்கும் இடத்திலேயே அவை நிலைநிறுத்தப்படும் என்று மேம்பாட்டாளர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் நூற்றாண்டு வரலாற்றை கொண்ட சங்கீத சபா தமிழ்ப்பள்ளியுடன், காளியம்மன் ஆலயம், மகா கணபதி ஆலயம், இராமர் ஆலயம் அவற்றுடன் சீக்கியருக்கான குருத்துவாரா-வும் உள்ளதாக டத்தோ சிவநேசன் விவரித்தார்.
"மேலும், பள்ளி பயன்படுத்தி வரும் விளையாட்டு திடல் பகுதியும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு , விளையாட்டு மையமாக மாற்றப்படும் எனவும் இந்த திடல் ஈப்போ மாநகர் மன்ற பராமரிப்பில் இருக்கும்," என்றார் அவர்.
இதனிடையே, ஈப்போ சென்ட்ரல் திட்டம் நிறைவேறும் போது சங்கீத சபா தமிழ்ப்பள்ளியும் அப்பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களும் புதிய தோற்றத்துடன் நகர வளர்ச்சியின் முக்கிய மையங்களாக உருவெடுக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இன்று, பேராக் மாநில இந்து சங்கத்தின் 49-ஆவது மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமாகிய சிவநேசன் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)