அஷ்காபாட், 19 ஜூன் (பெர்னாமா) -- டாடர்ஸ்தான் குடியரசின் கசான் நகரில் தனது இரண்டு நாள்கள் அலுவல் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், 'வெள்ளை பளிங்கு நகரம்' என்று அழைக்கப்படும் துர்க்மெனிஸ்தானைச் சென்றடைந்தார்.
வியாழக்கிழமை தொடங்கும் இரண்டு நாள்கள் அலுவல் பயணத்திற்காக அன்வாரை ஏற்றிச் சென்ற விமானம் உள்ளூர் நேரப்படி இரவு மணி 8-க்கு அஷ்காபாட் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வாருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
அஷ்காபாட்டை வந்தடைந்த பிரதமரை, துர்க்மெனிஸ்தானுக்கான மலேசியத் தூதர் முஹமட் சுஹைமி அஹ்மாட் தஜுடின் மற்றும் துர்க்மெனிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கான அமைச்சரவையின் துணைத் தலைவர் குவான்ச் அகாஜனொவ் ஆகியோர் வரவேற்றனர்.
2024- ஆம் ஆண்டு டிசம்பரில் துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டிமுஹமெடோவ் மலேசியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தொடர்ந்து, அவரின் அழைப்பை ஏற்று அந்த மத்திய ஆசிய நாட்டிற்கு அன்வார் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
இதனிடையே, துர்க்மெனிஸ்தான், அஷ்காபாட்டில் உள்ள மலேசியர்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுடன் மேலும் நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து கட்டியெழுப்பி வளர்ப்பதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பகிர்ந்துக் கொள்ள இவ்வாய்ப்பு பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
புலம்பெயர்ந்தோர் எப்போதும் தாய்நாட்டுடன் தொடர்பில் இருப்பதும், தேசிய வளர்ச்சியின் துடிப்பு மற்றும் உணர்வின் ஒரு பகுதியாக மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அஷ்காபாட்டிற்கு மேற்கொண்டிருக்கும் பயணம், வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்த அல்ல.
மாறாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை விரிவுபடுத்தி, புரிதலை வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய புதிய ஒத்துழைப்புத் துறைகளைத் திறக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே இப்பயணம் என்றும் பிரதமர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)