Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உலக கிண்ணம்; சிறந்த 32 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்குத் தேர்வாகிய மெக்சிகோ

19/06/2026 04:28 PM

மெக்சிகோ, 19 ஜூன் (பெர்னாமா) --  2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியை இணைந்து நடத்தும் மெக்சிகோ KNOCK OUT சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆட்டத்தில் மெக்சிகோ, தென் கொரியாவை 1-0 என்ற கோலில் தோற்கடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், இரண்டாம் பாதியைக் காண குவாடலஹாரா அரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் இரண்டாம் பாதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ அடித்த ஒற்றை கோல், மெக்சிகோ அணியை சிறந்த 32 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்கு அழைத்துச் சென்றது.

இவ்வெற்றியின் மூலம் மூன்று புள்ளிகளைப் பெற்ற மெக்சிகோ, தற்போது மொத்தம் ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதே வேளையில், தென் கொரியா மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

ஜூன் 25-ஆம் தேதி நடைபெறும் குழு அளவிலான இறுதி ஆட்டத்தில் மெக்சிகோ, செக் குடியரசுடன் மோதவுள்ளது.

இதனிடையே, ஏ குழுவுக்கான மற்றோர் ஆட்டத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்காவும் செக் குடியரசும் 1-1 என சமநிலை கண்டன.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து செக் குடியரசு முன்னணி வகித்தாலும், இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான ஆட்டத்தினால் செக் குடியரசின் வெற்றி வாய்ப்பு கைநழுவியது.

ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா ஆட்டத்தை 1-1 என முடித்து வைத்தது.

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற பி குழுவுக்கான ஆட்டத்தில் கனடாவும் கத்தாரும் மோதின.

இந்த ஆட்டத்தில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா, 6-0 என்ற கோல்களில் கத்தாரை வீழ்த்தியது.

இவ்வாட்டத்தில் கனடாவின் ஜோநதன் டேவிட் மூன்று கோல்களை அடித்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

மற்றோர் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் அரங்கில் களமிறங்கிய சுவிட்சர்லாந்து, போஸ்னியா ஹெர்ஸ்கோவினாவை 4-1 என எளிதாக வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

இவ்வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி தற்போது நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வரும் வியாழக்கிழமை வான்கூவர் நகரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து கனடாவை எதிர்கொள்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)