தஞ்சோங் மாலிம், மே 24 (பெர்னாமா) -- முக்கலைகளில் ஒன்றான நாடகம் மற்றும் நடிப்பாற்றலின் பால் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, உயர்க்கல்விக்கழக மாணவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டினை ஊக்குவிக்க பல நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அதில் பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகமான உப்சியில் நேற்று வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 'நாடகச் சுடர் 2026' என்ற மேடைப் போட்டி ஒன்பதாவது முறையாக சிறப்பாக நடைபெற்றது.
கடந்த காலங்களில் உப்சியின் தனித்துவ அடையாளமாகத் திகழ்ந்த இப்போட்டியில் நான்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த எட்டு குழுக்கள் கலந்து கொண்டதாக உப்சி தமிழ்ப்பிரிவுத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா தெரிவித்தார்.
"இப்போட்டியில் மாணவர்கள் தங்களின் அபார திறனாற்றலை வெளிப்படுத்தி அனைவரின் பாரட்டினையும் பெற்றனர். மேலும் இப்போட்டியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனும் அனைவரின் திறமையையும் வெகுவாகப் பாராட்டினார்," என்றார் அவர்.
வரும் காலங்களிலும் இத்தகைய தரமான நிகழ்ச்சிகளை நடத்துமாறு அறிவுரை கூறிய டத்தோ சிவநேசன், அதற்கு தாம் முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் கூறியிருப்பதாக முனைவர் கார்த்திகேஸ் கூறினார்.
தெருக்கூத்துகளாக இருந்து, மேடை நாடகங்களாக உருமாறி, இலக்கிய நாடகங்களாக வளர்ச்சி பெற்ற இக்கலையை இளைஞர்களிடையே மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் உப்சி வளர்தமிழ் மன்றம், ஆண்டுதோறும் இப்போட்டியை ஏற்று நடத்துவதாக அதன் தலைவர் செல்வன் கலையரசன் ஆறுமுகம் தெரிவித்தார்.
"2010 தொடங்கி 2018ஆம் ஆண்டுவரை வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த, இலக்கியம் சார்ந்த இந்த மேடைப் போட்டி, கொவிட் 19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ஈராண்டுகளாக முடங்கிப் போயிருந்தது. கடந்த ஆண்டு கிடைத்த பிரமாண்ட ஆதரவைத் தொடர்ந்து இவ்வாண்டும் அதை சிறப்பாக நடத்திவிட்டோம். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்வோம்," என்றார் அவர்.
உள்நாட்டு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய திவாகர் சுப்பையா, நடிகர் தேவகுரு சுப்பையா, பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் கலியப்பெருமாள் ஆகியோர் இப்போட்டியின் நடுவர்களாக விளங்கினர்.
இப்போட்டியில், துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'அரங்க வில்லுகள்' குழு முதல் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது.
இரண்டாம் நிலையில் துவான்கு பைனூன், ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 'வேதிக்கனல்' குழுவும், மூன்றாம் நிலையில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த 'தீச்சுடர்' குழுவும் வெற்றி பெற்றது.
சிறந்த நடிகருக்கான விருதினை உப்சி பல்கலைக் கழக விண்மீன் கதிர்கள் குழுவினரில் “அருண்” கதைப்பாத்திரத்தில் நடித்த செல்வன் கிஷனுக்கு வழங்கப்பட்ட வேளையில், சிறந்த கதையம்சம் கொண்ட படைப்பாக இளையரங்கம் குழு தேர்வானது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)