Ad Banner
Ad Banner
 பொது

திருமுறைகளின் அருட்பெருமையைப் பறைசாற்றிய 48-ஆம் திருமுறை ஓதும் விழா

22/06/2026 05:29 PM

காப்பார், 22 ஜூன் (பெர்னாமா) - சைவ சமயத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும், திருமுறைகளின் மாண்பை, வளரும் தலைமுறையினரிடம் விதைக்கும் நோக்கில், சிலாங்கூர், காப்பார் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 48-ஆம் திருமுறை ஓதும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்து சங்கம், காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், ஆலயங்கள், சமயம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்து 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக வட்டாரப் பேரவைத் தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.

ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்விக் கழக மாணவர்களுடன் பெரியவர்களும் அதிகளவில் இப்போட்டியில் கலந்து கொண்டதால், ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டதாக அருள்நேசன் விவரித்தார்.

இப்போட்டியை முன்னிட்டு கடந்த ஆறு மாத காலமாக காப்பார் வட்டார இந்து சங்கப் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் திருமுறை குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வட்டார இந்து சங்கத்தின், இம்முயற்சிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆலய நிர்வாகமும் சமய அமைப்புகளும் இணைந்து கைகொடுத்திருப்பதாக அருள்நேசன் கூறினார்.

மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தயார்ப்படுத்தப்படுவார்கள் என்றும் அருள்நேசன் தெரிவித்தார்.

இதனிடையே, இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் சிலர் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் ஆகியவற்றுடன், கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)