தெலுக் இந்தான், ஜூன் 22 (பெர்னாமா) -- கடந்தாண்டு, பேராக், தெலுக் இந்தானில் அபாயகரமான முறையில் லாரியை ஓட்டி, FRU எனப்படும் ஒன்பது சேமப்படை உறுப்பினர்களுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய லாரி ஓட்டுநர், இரு பசு மாடுகளைக் களவாடியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட 46 வயதான ரூடி சுல்கர்னைன் மாட் ராடிக்கு எதிராக போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நய்டாதுல் அதிரா அஸ்மான் அத்தீர்ப்பை வழங்கினார்.
ரொசாலி இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான இரு பசுக்களைத் திருடி அதை இடமாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, கடந்தாண்டு மே 20-ஆம் தேதி ரூடி சுல்கர்னைன் மறுத்து வாதிட்டார்.
கடந்தாண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி, பேராக் ஹூதான் மெலிந்தாங்கில் உள்ள கம்போங் கெபூன் பாரு கிராமத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 414-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
கடந்தாண்டு அக்டோபர் 15 தொடங்கி இவ்வாண்டு மார்ச் 17-ஆம் தேதி வரை மேற்கொண்ட விசாரணையில் அரசு தரப்பிலிருந்து ஐவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)