கோலாலம்பூர், 25 மே (பெர்னாமா) -- விவசாய மூலப்பொருள் துறையில் ஏற்பட்ட உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தைத் தொடர்ந்து, தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சு, கே.பி.கே, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் வழி நாட்டில் அத்துறையின் உபகரணச் சங்கிலி மேம்படுத்தப்படும்.
நாட்டின் ஏற்றுமதிக்குப் பங்களிப்பதோடு, சிறு தோட்டக்காரர்களின் வருமானம், தோட்ட விவசாய நடவடிக்கைகள், உற்பத்தி, உபகரணங்கள் மற்றும் சார்புத் தொழில்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்துறையின் முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசீர் கூறினார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த கணிப்பின்படி, விவசாய மூலப்பொருள்கள் ஏற்றுமதி 13.48 விழுக்காடு சரிவு கண்டு 17 ஆயிரத்து 20 கோடி ரிங்கிட்டாகவும், இறக்குமதி 3.28 விழுக்காடு குறைந்து 7247 கோடி ரிங்கிட்டாகவும் இருக்கும் என்று அக்மல் நஸ்ருல்லா தெரிவித்தார்.
''உபகரண இடையூறுகள், அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் செயல்பாட்டு அழுத்தங்கள் ஆகியவை ஏற்றுமதிப் போட்டித்திறனையும் சிறு விவசாயிகளின் வருமானத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், இந்நடவடிக்கையில் கவனம் தேவைப்படுகிறது'', என்றார் அவர்.
இன்றைய உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்தில் கே.பி.கே, குறிப்பாக நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் பிற தணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில், நாட்டின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விநியோகம் சீராகவும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதை அக்மல் நஸ்ருல்லா சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மிக அவசியமான மற்றும் அதிக அபாயம் உள்ள பொருள்களுக்கு தொடர் தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு, MTEN-னின் 12வது கூட்டத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இடரின் அளவு மற்றும் உண்மையான தேவைகளின் அடிப்படையில் எந்தவொரு செலவு ஒருங்கிணைப்பு நடவடிக்கையும் இலக்கு சார்ந்த முறையில் மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
மே 8 ஆம் தேதி நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்துப் பொருள்களில் 72 விழுக்காடு குறைந்த அபாய நிலையிலும், 11.3 விழுக்காடு நடுத்தர நிலையிலும், 16.8 விழுக்காடு தொடர் கண்காணிப்பு தேவைப்படும் உயர் நிலையிலும் இருந்ததாக அக்மல் நஸ்ருல்லா தெரிவித்தார்.
''மருத்துவச் சாதனங்களைப் பொறுத்தவரை, 81.7 விழுக்காடு குறைந்த அபாயத்திலும், 13.5 விழுக்காடு நடுத்தர அபாயத்திலும், 4.8 விழுக்காடு அதிக அபாயத்திலும் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் மூலங்களைச் சார்ந்திருப்பதால், மூலப்பொருள்கள் மற்றும் முக்கிய பாகங்களின் விநியோகம் அதிக அபாயத்தில் உள்ளது'', என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)