புத்ராஜெயா, 25 மே (பெர்னாமா) -- கிளந்தானில் ஒரு கிலோகிராம் காய்கறியின் விலை இரண்டு ரிங்கிட் வரை அதிகரித்ததாகக் கூறப்படுவது தொடர்பாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, கே.பி.கே.எம் கூட்டரசு விவசாயச் சந்தைப்படுத்தல் வாரியம், ஃபாமாவிடமிருந்து உடனடியாக அறிக்கையைப் பெறும்.
சில குறிப்பிட்ட வகை காய்கறிகளைத் தவிர கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட பெரும்பாலான பகுதிகளில் இதுவரை பொதுவாகவே காய்கறி விலைகளில் திடீர் உயர்வு எதுவும் ஏற்படவில்லை என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
''கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் அதிகரிப்பு எதுவும் இல்லை என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். சில குறிப்பிட்ட வகை காய்கறிகள் உள்ளன. ஆனால், பொதுவாகவே திடீர் அதிகரிப்பு எதுவும் இல்லை. கிளந்தானில் நாங்கள் கண்காணிப்போம். இன்று விரைவில் ஃபாமாவிடமிருந்து நான் ஓர் அறிக்கையைப் பெறுவேன்'', என்றார் அவர்.
நீடித்த வெப்பமான வானிலை மற்றும் அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக, கிளந்தானில் உள்ள பல சந்தைகளில் காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு இரண்டு ரிங்கிட் வரை அதிகரித்துள்ளதாக வந்த செய்திகள் குறித்து விவரித்தபோது டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு அவ்வாறு கூறினார்.
அதேவேளையில், உணவுப் நெருக்கடி பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், மூலப்பொருட்களின் விலையை உயர்த்தும் காரணங்களில் ஒன்றான உரங்களின் விலை உயர்வு, பல நாடுகள் எதிர்கொள்ளும் ஓர் உலகளாவிய சவால் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக அவர் திங்கட்கிழமை, புத்ராஜயாவில் கெபுனித்தி விவசாய தகவல் மையம் அல்லது கார்டன்தோபியாவைத் திறந்து வைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)