புத்ராஜெயா, 25 மே (பெர்னாமா) -- புத்ராஜெயா கூட்டமைப்பின் மேற்பார்வையின் கீழ் உள்ள 244 சிறு வணிகர்கள், தங்களின் நடவடிக்கைச் செலவு அழுத்தங்களையும் தற்போதைய பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள உதவும் ஒரு நடவடிக்கையாக, ஜூன் 1-ஆம் தேதி முதல் அவர்களின் மாதாந்திர வாடகைக் கட்டணம் 30 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வரை 12 மாதங்களுக்கு அமல்படுத்தப்படவுள்ள இந்த முன்னெடுப்பில், புத்ராஜெயா கூட்டமைப்புக்குச் சொந்தமான உணவுக்கூட வியாபாரிகள், சிறுகடைகள் மற்றும் சந்தைகள் உட்படுத்தப்படவுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
வாடகைக் குறைப்புக்குத் தகுதிபெற சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் நிலுவையில் உள்ள தங்களின் வாடகைக் கட்டணத்தை மே மாதம் வரை செலுத்தி இருக்க வேண்டும் என்று ஹன்னா குறிப்பிட்டார்.
''இந்த நடவடிக்கை, வியாபாரிகள் தங்களின் வாடகைக் கடமைகளை மிகவும் நிலையான மற்றும் நீடித்த முறையில் மறுசீரமைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இன்று, புத்ராஜெயா கூட்டமைப்பின் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டத்தையும் நாங்கள் அறிவித்தோம். இங்குள்ள உணவுக்கூடத்தில் தொடங்கும் இந்தத் திட்டத்தின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உணவு மற்றும் பானங்களுக்கு அதிகபட்சமாக 15 விழுக்காடு வரை கழிவு வழங்க அனைத்து வியாபாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்'', என்றார் அவர்.
புத்ராஜயாவில் உள்ள Presint 9 உணவுக்கூடத்திற்கு வருகை புரிந்திருந்தபோது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாரு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)