Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

செப்பாட் தளத்தில் மூவர் பலி - விசாரணையை முடுக்கியுள்ள பெட்ரோனாஸ்

25/05/2026 05:32 PM

கோலா திரெங்கானு, 25 மே (பெர்னாமா) --  திரெங்கானு-கிளந்தான் கடல் பகுதியில் உள்ள செப்பாட் தளத்தில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீட்புப் படகு பராமரிப்புப் பணியின்போது ​​மூன்று ஒப்பந்தப் பணியாளர்கள் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்ததை பெட்ரோலியம் நேஷனல் நிறுவனம், பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இச்சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பெட்ரோனாஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குப் பெட்ரோனாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதே நிறுவனத்தின் உடனடி முன்னுரிமையாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தளத்தின் கீழ் பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காகக் கடலுக்குச் செல்வதற்குப் பாதிக்கப்பட்ட நால்வரும் அப்பகுதியில் இருந்த ஓர் படகில் ஏறியபோது, ​​மதியம் 12.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று நேற்றிரவு கோலா திரெங்கானு போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹமட் நோர் தெரிவித்தார்.

மீட்புப் படகுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்துவிட்டதால், படகும் அதில் இருந்த நால்வரும் கடலில் விழுந்ததாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

இறந்தவர்கள், மலாக்கா, பத்து பெரன்டம்மைச் சேர்ந்த 38 வயதுடைய அஹ்மட் ஃபிக்ரி சகாரியா, பகாங், குவாந்தானைச் சேர்ந்த 28 வயதுடைய முஹமட் ஃபைசுவான் ஹக்கிம் முஹமட் புஸ்தமாம், பகாங், பண்டார் இந்திரா மக்கோத்தாவைச் சேர்ந்த 38 வயதுடைய நிக் முஹமட் ஹஃபிபி அஸ்ரி அப்துல் மஜிட் ஆகியோராவார்.

காயமடைந்த சிலாங்கூர், பந்திங்கைச் சேர்ந்த 37 வயதுடைய முஹமட் தௌஃபிக் முஹமட் ருஸ்லான் தற்போது கோலா திரெங்கானு சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)