காஜாங், 26 மே (பெர்னாமா) -- நேற்று இரவு, காஜாங், பண்டார் ஶ்ரீ புத்ராவில் போலீசாருடனான துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு உள்நாட்டு ஆடவர்கள், ஓராண்டிற்கும் மேல், சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் ஆயுதக் கொள்ளைக் குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
25 மற்றும் 46 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
துப்பாக்கிகள் மற்றும் பாராங் கத்தி போன்ற ஆயுதம் ஏந்தி, நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள வீடுகளைக் குறிவைத்து, பாதிக்கப்பட்டவர்களை வன்முறையாகக் காயப்படுத்தி அவர்கள் இச்செயலில் ஈடுபட்டு வந்ததாக டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
நேற்றிரவு 9.10 மணிக்கு நடந்த சம்பவம் குறித்து விவரித்த அவர், குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புக்கிட் அமான் போலீஸ் நிலையத்தின் D9 பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த ஒரு புரோட்டான் வீரா வாகனத்தைக் கண்டதாகக் கூறினார்.
"அது (கார்) காணப்பட்ட இடத்திலிருந்து ஏறக்குறைய 500 மீட்டர் தொலைவில் உள்ள ஜாலான் பெர்சியாரன் ஶ்ரீ புத்ரா 2, பண்டார் ஶ்ரீ புத்ரா, பாங்கி, காஜாங் ஆகிய இடங்களுக்கு போலீஸ் குழு வாகனத்தைப் பின்தொடர்ந்தது. சந்தேக நபர் நிறுத்த மறுத்து அதிவேகமாகச் சென்றதால், போலீசார் அவரைத் துரத்திச் சென்று சாலையோரத்தில் வெற்றிகரமாக முந்திச் சென்றனர். இதனால், மோதல் ஏற்பட்டது,'' என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் போலீசாரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வேளையில், போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை மேற்கொண்டதில், ஓட்டுநரும் முன் இருக்கைப் பயணியும் காயங்களின் காரணமாக உயிரிழந்தனர்.
அக்கும்பலில் சுமார் 10 பேர் இருந்ததால், எஞ்சிய உறுப்பினர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் நம்புவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், முன்னாள் நிதியமைச்சர், மறைந்த துன் டயிம் சைனுடினின் துணைவியார் தோ புவான் நயிமா காலிட் உட்பட அவரின் இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் இருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை தொடர்பில் இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து, நயிமாவைத் தொடர்புகொள்ள போலீஸ் முயற்சி செய்து வரும் வேளையில், விசாரணைக்கு உதவும் பொருட்டு 17 பேரின் வாக்குமூலங்களைப் போலீஸ் பதிவு செய்திருப்பதாக குமார் கூறினார்.
''விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் தற்போது அவர்களின் பதிலுக்காகவும் தொடர் உத்தரவுக்காகவும் காத்திருக்கிறோம்,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குமார் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)