கரகாஸ், 04 ஜூன் (பெர்னாமா) -- கரகாசிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முதன்மை நாடுகளில் ஒன்றான இந்தியாவுடன், எரிசக்திக்கான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன், வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகுவேஸ் புதுடெல்லிக்கான தமது ஐந்து நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை நேற்று தொடங்கினார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், மாற்று கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்கு புதுடெல்லி முயன்று வரும் நிலையில், அவர் தமது பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எரிசக்தித் துறையின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு வந்தடைந்த ரோட்ரிகுவேஸ், அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய வெனிசுவேலாவின் செய்தியைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ஒத்துழைப்பிற்கான துறைகள் குறித்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மே மாதத்தில், தினசரி 427,000 பீப்பாய்கள் என்ற அளவில் அந்நாட்டில் எண்ணெயைக் கொள்முதல் செய்த நிலையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது.
அண்மைய மாதங்களில், வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை வாங்கும் மூன்று பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் ரிலேன்ஸ் தொழில்துறை நிறுவனம் உருவெடுத்தது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)