கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- 2025/2026 PSA தொடர் ஸ்குவாஷ் போட்டியின் இறுதி சுற்றுக்கு, நாட்டின் தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி முன்னேறினார்.
இந்த வெற்றியின் வழி, 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
போட்டியின் நான்காம் நிலை வீராங்கனையான சிவசங்கரி, விறுவிறுப்பான இந்த அரையிறுதிப் போட்டியில் எகிப்தின் முன்னணி நட்சத்திரமான அமினா ஓர்ஃபியை 3-1 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
74 நிமிடங்களில் 8-11, 11-10, 11-8, 11-10 எனும் செட்களில் அவர் தனது வெற்றியை உறுதி செய்தார்.
சிவசங்கரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், மலேசிய மகளிர் ஸ்குவாஷ் அணியின் 14 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இறுதி போட்டியில், அவர் எகிப்தின் மற்றுமொரு முன்னணி வீராங்னையான ஹனியா எல்-ஹம்மாமி உடன் களம் காண்வுள்ளார்.
அவ்விருவரும் இதுவரை சந்தித்த 10 போட்டிகளில், இரண்டில் மட்டுமே சிவசங்கரி வெற்றிப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெற்றி வாய்ப்பு ஹனியாவுக்கு சாதகமாக உள்ளது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)