புனியா, 20 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயக குடியரசின் வடகிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில், கடந்த மே மாத தொடங்கி இதுவரை குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அங்கு எபோலா நோய் மிக வேகமாகப் பரவி வருவதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்றும் முகாம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த அளவிலான மரணங்கள் இதுவரை நிகழவில்லை என்று முகாம் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியாக விளங்கும் புனியா (Bunia) நகரில் உள்ள கிகோன்சி (Kigonze) அகதிகள் முகாமில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
எனினும், உயிரிழந்தவர்கள் அல்லது சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை வரை மறுப்பு தெரிவித்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாகவே, இந்த மரணங்களுக்கான துல்லியமான காரணத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்று முகாம் செய்தித் தொடர்பாளர் ஒருவரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தும் எபோலா பாதிப்பிற்குரிய முக்கிய அறிகுறிகளாகும்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)