புத்ராஜெயா, 08 ஜுன் (பெர்னாமா) -- ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான நப்பிக்கைக் கூட்டணி, பி.எச்-இன் உறுப்பு கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, அக்கூட்டணியின் செயலக நிலையில் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ பட்டியல், கூடிய விரைவில் பி.எச் தலைவர் மன்றக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமது தலைமையில் நடைபெற்ற பி.எச் செயலகக் கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட தொகுதிப் பங்கீடுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''எனவே, அடுத்த செயல்முறை, உறுதிப்படுத்துவது ஆகும். பிரதமர் தலைமையிலான தலைவர் மன்றக் கூட்டம் ஒன்று நடத்தப்படும். அந்த பட்டியல் இறுதியானது என்பதை நான் அங்கு சமர்ப்பிப்பேன்,'' என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, வரும் மாநிலத் தேர்தலில்,ஜோகூரில் உள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பி.எச் அறிவித்திருந்தது.
இதனிடையே, நெகிரி செம்பிலான் மந்திரி புசாரும், மாநில பி.எச் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன், அம்மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பி.எச் போட்டியிடவிருப்பதாக, கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)