லாஸ் ஏஞ்சலஸ், 21 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பல நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய கிடங்குத் தீ விபத்து காரணமாக அங்கு அவசரக்கால நிலை அறிவிக்கப்பட்டது.
46 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட, உறைந்த உணவுப்பொருள் கிடங்கில், கடந்த புதன்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அதனை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கட்டுக்கடங்காத தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் முயன்ற வேளையில் கிடங்கிலிருந்து கசிந்த அமோனியா ரசாயனமும் உருகிய சூரிய மின்தகடுகளும் அப்பணியைச் சிக்கலாக்கியுள்ளன.
பலமாக வீசிய காற்றில் கரும்புகை கலந்ததால், அங்குள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டது.
தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முயற்சிக்கும் நிலையில், உள்ளே தீ இன்னும் எரிந்து கொண்டு வருவதால், அதன் புகையில் நெகிழி வாசனை கலந்துள்ளது தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)