Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தோல்வியிலும் உலகத் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் சிவசங்கரி

21/06/2026 07:54 PM

பாரிஸ், 21 ஜூன் (பெர்னாமா) -- பிரான்ஸ், பாரிசில் இன்று அதிகாலை நடைபெற்ற 2025/2026  பி.எஸ்.ஏ உலகத் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நாட்டின் முன்னணி மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, உலகின் முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியிடம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெற்றியாளர் பட்டத்தை நழுவவிட்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் தோல்விக் கண்டபோதிலும், உலகின் ஐந்தாம் நிலையில் இருந்த சிவசங்கரி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி தமது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவின் ஸ்குவாஷ் நட்சத்திரம் டத்தோ நிக்கோல் டேவிட் கடந்த 2012ஆம் ஆண்டு இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். 

அதற்குப் பிறகு, இந்த புகழ்பெற்ற உலகத் தொடரில் மலேசியாவை பிரதிநிதித்து, சிவசங்கரி போட்டியிட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில்,  சிவசங்கரி, முதல் செட்டை 6-11 என இழந்தார். 

ஆனால், அதன் பின்னர் எகிப்தின்  எல் ஹமாமிற்கு ஈடுகொடுத்து விளையாடிய சிவசங்கரி, இரண்டாவது செட்டை 11-10 என்று கைப்பற்றினார்.

இருப்பினும், 3-வது மற்றும் 4-வது செட்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எல் ஹமாமி, ஆட்டத்தை மீண்டும் தமது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)