புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் அனைத்து ஊழியர்களும், பின்னர் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் தங்களின் சொத்து அறிவிப்புகளை செய்வது அல்லது புதுப்பிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு சுதந்திரமான, தொழில்முறை மற்றும் நியாயமான கழகமான, எஸ்.பி.ஆர்.எம் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதோடு, அதன் நேர்மையை வலுப்படுத்த தமது தலைமைத்துவத்தின் கீழ், அந்த உத்தரவு ஓர் ஆரம்ப நடவடிக்கையாகும் என்று அதன் தலைமை ஆணையர், டத்தோ ஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற எஸ்.பி.ஆர்.எம்-இன் மாதாந்திரக் கூட்டத்தில் முதன்மை உரையாற்றியபோது, அந்த முயற்சிக்கு முன்னுதாரணமாக, தமது சொத்துகளை அறிவிக்கும் செயல்முறையைத் தாமே தொடங்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களின் அழுத்தம், ஊடக உணர்வு உள்ளிட்ட எந்த ஒரு தரப்பின் அழுத்தத்திற்கும் எஸ்.பி.ஆர்.எம் அடிபணியாது அல்லது அரசியல் நலனுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
எஸ்.பி.ஆர்.எம் ஊழியர்கள், தவறான செயல்களில் ஈடுபட்டு, ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்றும் அப்துல் ஹலிம் எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)