Ad Banner
Ad Banner
 பொது

2 கோடியே 8 லட்சம் ரிங்கிட் மதிப்பில் மடானி தளவாடம் & கல்வி மடானி திட்டங்கள்

23/06/2026 06:46 PM

ஜோகூர் பாரு, 23 ஜூன் (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் சுமார் 50,000 மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இரண்டு கோடியே எட்டு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான Perabot Madani எனப்படும் மடானி தளவாடப் பொருளுதவி மற்றும் கல்வி மடானி ஆகிய திட்டங்கள் வழிவகுத்துள்ளன. 

தமிழ்ப்பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் கற்றல் சூழலை வலுப்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி சார்ந்த அடைவுநிலையை மேம்படுத்துவதிலும், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரவான மித்ராவின் கீழ் உள்ள இத்திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாக, மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவிந்தரன் நாயர் தெரிவித்தார்.  

361 அரசாங்க உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 39,692 மாணவர்கள் மற்றும் அவற்றில் கற்பிக்கும் 5,290 ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக மாணவர் நாற்காலி, மேசைகள், ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறை மேசை, நாற்காலிகள், வெண்பலகைகள், இரும்பு அலமாரிகள், சிற்றுண்டி மேசை மற்றும் இருக்கைகள், கணினி மேசை, நெகிழி நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு தளபாடப் பொருட்கள் வழங்கப்பட்டதாக ரவிந்தரன் கூறினார். 

ஒரு கோடியே 28 லட்சம் ரிங்கிட் செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, கல்வி மடானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட 315 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் B40 பிரிவைச் சேர்ந்த சுமார் 10,410 மாணவர்களுக்கு 80 லட்சம் ரிங்கிட் மதிப்பில் இலவச பிரத்தியேக வகுப்புகள் மேற்கொள்ளப்படும் என ரவிந்திரன் விவரித்தார். 

பள்ளி நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்த இலவசப் பிரத்தியேக வகுப்புகளில் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இன்று, ஜோகூர், ஜோகூர் பாரு, ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்த இத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கும் கலந்துகொண்டார். 

-- பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]