கோலாலம்பூர், 08 ஜூன் (பெர்னாமா) -- நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காட்டினர், அதாவது மூன்று கோடியே 31 லட்சம் மக்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களில் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை உட்படுத்திய பகடிவதைச் சம்பவங்களும் இணையக் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதனைக் கருத்தில் கொண்டு, அத்தரப்பினருக்கான உரிமை மீறல் நிகழும் பட்சத்தில் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக, 2025-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டம், ONSA-வின் கீழ், புதிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜூன் முதலாம் தேதி தொடங்கி அரசாங்கம் அமல்படுத்துகிறது.
சமூக ஊடகத்தள நடத்துநர்கள் மற்றும் அச்சேவை வழங்குநர்கள் அனைவரும் இச்சட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சகுந்தலா நாராயணசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், மலேசியாவில், ஒரு சமூக ஊடகத் தளம் 80 லட்சம் பயனர்களைக் கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட அத்தளம் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்ஷன் 46A-இன் கீழ் உட்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததை சகுந்தலா சுட்டிக்காட்டினார்.
குறிப்பிடப்பட்ட அச்சட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டவர்கள் தானாகவே ONSA-வின் கீழும் உட்படுத்தப்படுகிறார்கள்.
''ஒரு சில இலக்கவியல் தளங்கள் சொல்ல வாய்ப்புள்ளது. அதாவது, இத்தளத்தை நாங்கள் மக்களுக்காக வழங்குகிறோம். நாங்கள் வெளிநாட்டிலிருந்து சேவை செய்கிறோம். இதுபோன்ற பல காரணங்களைக் கூறி, பாதுகாப்பு அம்சங்களில் பொறுப்பேற்க முடியாது என்று தட்டிக்கழிப்பார்கள் எனும் சாத்தியதால், 80 லட்சம் பயனர்கள் கொண்டிருக்கும் தளங்கள் தானாகவே இந்த செக்ஷன் 46A-இன் கீழ் வருகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது,'' என்று அவர் விளக்கினார்.
ஜுன் முதலாம் தேதியிலிருந்து 16 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தையும் அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அதன் சட்டக் கூறுகளையும் சகுந்தலா இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.
''கடந்த ஜூன் முதலாம் தேதி தொடங்கி, ONSA மற்றும் எம்.சி.எம்.சி சட்டங்களின் கீழ் சிறார் பாதுகாப்பு குறியீடு மற்றும் இடர் தணிப்பு குறியீடு ஆகிய இரண்டும் அமலாக்கத்திற்கு வந்துள்ளன. 16 வயதிற்கும் கீழ்ப்பட்டவர்கள் நிச்சயமாக சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. இது கட்டாயம்,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, பதின்ம வயதினரிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சமூக ஊடகப் பயன்பாட்டினால் அவர்கள் மத்தியில் நிலவும் மனவுளைச்சல் தொடர்பிலான தரவையும் அவர் விவரித்தார்.
''73 விழுக்காட்டு மாணவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும், 83 விழுக்காட்டு மாணவர்கள் மன அழுத்தத்தையும், 73 விழுக்காட்டு மாணவர்கள் தனிமையையும் உணர்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களைப் பாதுகாக்கவே இப்புதிய சட்டம் உருவாகியுள்ளது,'' என்றார் அவர்.
இலக்கவியல் உலகில் பாதுகாப்பையும் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படும் ONSA, இணையத் தளங்களை அதிக பொறுப்புடன் செயல்பட வைக்கும் புதிய சட்டக் கட்டமைப்பாக பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]